அரபிக்கடலில் உருவாகும் மேகுனு புயல் – மீனவர்களுக்கு அபாய எச்சரிக்கை..!


அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘சாகர்’ என்று பெயரிடப்பட்டது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இந்திய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த ‘சாகர்’ புயல் இந்தியாவுக்குள் நுழையாமல் எதிர் திசையில் சென்று ஏமன் மற்றும் சோமாலியாவுக்கு மத்தியில் உள்ள ஏடன் வளைகுடாவில் மையம் கொண்டது. அதன் பிறகு கடந்த 19-ந்தேதி சோமாலியாவில் புயல் கரையை கடந்தது.

சாகர் புயல் காரணமாக இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற சூழ்நிலை மறைவதற்குள் மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது.

அரபிக்கடலில் சாகர் புயல் உருவான அதே இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் பின்னர் அது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மேலும் இந்த புயல் தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி சென்று கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய புயலுக்கு மாலத்தீவு நாட்டின் சார்பில் ‘மேகுனு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

‘மேகுனு’ புயலால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அதே சமயம் அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகம், கர்நாடகா, மராட்டிய மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் வருகிற 23-ந்தேதி வரை தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அதே சமயம் இந்த புயலால் தமிழகத்திற்கு மழை வாய்ப்புகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் தெற்கு இலங்கை அருகிலும் வட தமிழகத்தின் உள் பகுதியிலும் இரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் உள்பகுதியிலும் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!