தண்டுவடம் உடைந்த கண்ணாடி விரியன் பாம்புக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்..!


தண்டுவடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு, மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் முல்லை நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, மே 19-ம் தேதி, சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றிருக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பார்த்து பயந்து ஓடியவர்கள், பிறகு பாம்பு ஏதோ ஒருவித உடல்நலக் குறைபாட்டில் இருக்கிறது என நினைத்து, அருகிலுள்ள ‘ஊர்வனம்’ என்னும் அமைப்பினருக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அவர்கள் பாம்பை பிடித்துப் பார்த்தபோது, முதுகுத்தண்டு உடைந்ததால் பாம்பு சிரமப்படுவது தெரியவந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் வனத்துறையினரின் ஒப்புதலுடன் , தல்லாகுளத்தில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனைக்குக் கண்ணாடி விரியன் பாம்பை கொண்டுசென்றுள்ளனர். அங்கு, பாம்புக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், முதுகுத்தண்டு அடிபட்டு எலும்பு விலகியிருப்பது தெரிந்திருக்கிறது.


பாம்புக்கு உயர் தர சிகிச்சை அளிப்பதற்காக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனத்துறை விலங்குகள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். பாம்பை பரிசோதித்த டாக்டர் அசோகன், பாம்புக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. மேலும், இங்கு உரிய வசதி இல்லாததால் சேலத்துக்குக் கொண்டுசென்று சிகிச்சையளிகலாம் என அங்குள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

அங்கு மயக்கமருந்து கொடுத்து, கிட்டத்தட்ட 4 மணி நேரம் கண்ணாடிவிரியனுக்கு ஆபரேஷன் நடைபெற்று, உடைந்துபோன தண்டுவடத்தை இணைத்துவைத்து சிகிச்சையளித்துள்ளனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் அசோகனிடம் பேசினோம். “இந்த கண்ணாடி விரியனை யாரோ பெரிய கட்டையால் தாக்கியிருக்காங்க. 15 நாளைக்கு முன்னாடி இது நடந்திருக்கலாம். அடிபட்ட இடத்தில் உள்பக்கமாக செஃப்டிக் ஆகியிருந்தது. தண்டுவடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்டிருக்கிறது. அதனால், 10 நாள்களாகச் சாப்பிட முடியாமல் இருந்திருக்கிறது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து, டாக்டர் அமர்நாத்துடன் சேர்ந்து சிறப்பாக சிகிச்சையளித்துள்ளோம். குறைந்தபட்சம் ஒருவார காலமாவது ஓய்வு எடுக்க வேண்டும். அதன்பிறகு, பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, காட்டில் விட்டுவிடுவோம்” என்றார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!