அம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா கைத்தொழில் பணியகம்- ரணில் திறந்து வைத்தார்


அம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த பணியகத்தை நேற்று திறந்து வைத்தார்.

வரும் ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக இயங்கத் தொடங்கும், 50 சதுர கி.மீ பரப்பளவுடைய கைத்தொழில் வலயத்தை இந்தப் பணியகம் மேற்பார்வை செய்யும்.

இந்தப் பணியகத்தில் சீன, சிறிலங்கா பணியாளர்கள் இணைந்து பணியாற்றுவர்.

இந்தப் பணியகம், சீன- சிறிலங்கா உறவுகளில் முக்கியமானதொரு மைல் கல் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலில் புதிய அத்தியாயம் ஒன்றின் ஆரம்பம் இது என்று வர்ணித்த சிறிலங்கா பிரதமர், சீனாவுக்கான இடைநிலைப் புள்ளியாக விரைவில் சிறிலங்கா மாறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், ‘இந்த கைத்தொழில் வலயத்தில், முதலீடுகளை செய்ய விரும்பும் சீன மற்றும் ஏயை நாடுகளின் தொழிற்துறைகளுக்கு இந்தப் பணியகம் முக்கியமான ஒரு நகர்வாக இருக்கும்.

சாத்தியமான எல்லா தொழிற்துறைகளையும் இந்த வலயத்துக்கு ஈர்ப்பதற்கும், எதிர்காலத்தில், சிறிலங்கா கைத்தொழில் மயமாவதற்கும் சீனா உதவும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!