விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புக்கள் தானம்..!!


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பசுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் ராஜேஸ் கண்ணா (வயது 19) அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

மற்றொரு மகன் பள்ளியில் படித்து வருகிறார். ராஜேஸ்கண்ணா தினமும் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ராஜேஸ் கண்ணா மீது பஸ் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே ராஜேஸ் கண்ணா மூளைச்சாவு அடைந்தார். இந்த விபரத்தை அவரது பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் கதறி அழுதனர். ஆனாலும் மனதை திடப்படுத்திக்கொண்ட தந்தை கிருஷ்ணமூர்த்தி, தனது மகன் இறந்தாலும் அவனது உடல் உறுப்புகள் மற்றவர்களை வாழச்செய்யும் வகையில் தானம் செய்ய முன்வந்தார். அதுபற்றி டாக்டர்களிடம் தெரிவித்தார்.

மூளைச்சாவு அடைந்த மாணவரின் இதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட காட்சி.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த மாணவர் ராஜேஸ் கண்ணாவின் உடல் உறுப்புகளை டாக்டர் ராஜரத்தினம் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அகற்றினர். இதில் 2 கண்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதயம் சென்னை மலர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் மூலம் தனது மகன் இன்னும் நீண்ட காலம் வரை வாழ்வான் என்று மாணவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!