கல்லூரியில் மாணவிகளை நிர்மலா தேவி எப்படி மூளைச் சலவை செய்வார்?- விசாரணையில் பகீர் தகவல்..!


பேராசிரியை நிர்மலா தேவி, எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார் என்பதை, விரிவாக விசாரணைக் குழுவினரிடம் சிலர் தெரிவித்துள்ளனர்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி மீது நான்கு மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்தனர். அதுதொடர்பாக, எழுத்துபூர்வமாக புகாரும் கொடுத்தனர். அதன்பேரில், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில், மாணவிகளுடன் நிர்மலா தேவி பேசும் செல்போன் உரையாடல், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி பணியாற்றும் கல்லூரியில் தொடங்கி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஆளுநர் அலுவலகம் வரை இந்த சர்ச்சை வட்டமடிக்கிறது.

தொடர்ந்து, கல்லூரியின் செயலாளர் ராமசாமி கொடுத்த புகாரின்பேரில், நிர்மலா தேவியை அருப்புக்கோட்டை நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அருப்புக்கோட்டை போலீஸாரிடமிருந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால், வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. தற்போது, நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க ஐந்து நாள்கள் அனுமதியளித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விசாரணை அதிகாரியாக நியமித்தார். அவரும், மதுரைக்குச் சென்று விசாரணை நடத்திவருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு விசாரணையை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடையவர்கள் சந்தித்துவருகின்றனர். மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா, பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவிகள் ஆகியோரிடம் சந்தானம் தலைமையிலான குழு விசாரிக்கத் திட்டமிட்டது. துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்களிடம் நேற்று விசாரணை நடந்தது.

விசாரணைக்குழுவைச் சேர்ந்த கமலி, தியாகேஸ்வரி உள்ளிட்ட சிலர், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு மனம்விட்டுப் பேசுமாறு விசாரணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். விசாரணையின்போது, நிர்மலா தேவி குறித்து வந்த தகவல்கள் எப்படி இருந்தது என்று விசாரித்தோம்.


”நிர்மலா தேவி, கல்லூரியில் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். குறிப்பாக மாணவிகளிடம் உரிமையோடு பேசுவார். அப்போது, மாணவிகளின் குடும்பப் பின்னணிகுறித்தும் விசாரிப்பார். அதன்பிறகு, அதில் சில மாணவிகளின் செல்போன் நம்பர்களை வாங்கிப் பேசுவார். வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலம் ‘குட் மார்னிங், குட் நைட்’ என்று மெஸேஜ் அனுப்புவார்” என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பழகுபவர்களின் முழு பயோ டேட்டாவையும் தெரிந்துகொள்வார். பழகிய சில நாள்களிலேயே தன் குடும்பத்தில் ஒருவர்போல நடத்துவார். அதனால், அவரை எளிதில் நம்பிப் பழகிவிடுவார்களாம்.

தினமும் மெஸேஜ் அனுப்புவார். பதில் அனுப்பாதவர்களிடம் உரிமையாகப் பேசி பதில் அனுப்பச்சொல்வார். அவர்களுடைய எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்போல அட்வைஸ் செய்வார். இப்படி சில வாரப் பழக்கத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப், சாட்டிங் என வேறு ரூட்டில் உரையாடல் பயணிக்கும். அதற்கு எதிர்த்தரப்பிலிருந்து வரும் ரியாக்‌ஷனைப் பொறுத்து, நிர்மலா தேவி தன் பேச்சுவார்த்தைத் தொனியை அமைத்துக்கொள்வாராம்.

கல்லூரி வளாகத்துக்குள், நிர்மலா தேவியைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற அளவுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேடம், அந்த அளவுக்கு கல்லூரியில் பிரபலம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். எப்போதுமே, ’கண்ணுங்களா’ என்றுதான் மாணவிகளை அழைப்பாராம். இவை, மேலோட்ட விசாரணையிலேயே வெளிவந்த தகவல்கள். இன்னும் நெருக்கி விசாரிக்கும்போது, மேலும் பல உண்மைகள் தெரியவரும்” என்கிறார்கள் விசாரணையின்போக்கைக் கவனிக்கும் சிலர்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!