ஐ.பி.எல். கிரிக்கெட்டால் நடந்த பயங்கரம் – தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன்..!


வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டை சாய் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 56). கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் நந்தகுமார் (38). திருமணம் ஆகாத இவர், வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தார்.

அண்ணாமலை நேற்றிரவு 9.30 மணிக்கு டி.வி.யில் சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அவரது மனைவியை பக்கத்து வீட்டு பெண் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக வெளியில் அழைத்து சென்று விட்டார்.

அப்போது, வெளியே சென்றிருந்த மகன் நந்தக்குமார் வீட்டிற்கு வந்தார். சீரியல் பார்த்து கொண்டிருந்த தந்தையிடம் ‘நான் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்க்க வேண்டும். சேனலை மாற்று’ என்று கூறினார்.

அதற்கு, அண்ணாமலை ‘‘தினமும் பார்க்கும் சீரியல். நாடகம் முடியட்டும், பிறகு நீ ஐ.பி.எல். பார்’’ என்று கூறி சேனலை மாற்றவில்லை. இதனால், மகன் நந்தக்குமார் அடம் பிடித்து கோபத்துடன் முரண்டுபிடித்தார்.

இதனால் தந்தை, மகன் இடையே பயங்கர தகராறு ஏற்பட்டது. தரையில் பாய் விரித்து படுத்துக் கொண்டு ‘சீரியல்’ பார்த்த தந்தையின் தலையில் இரும்பு கம்பியால் நந்தக்குமார் சரமாரியாக தாக்கினார்.

இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அண்ணாமலை ‘அபயக்குரல்’ எழுப்பி சுருண்டு விழுந்தார். கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மகன் நந்தக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அண்ணாமலையை உடனடியாக மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு சிறிது நேரத்தில் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

டி.எஸ்.பி. குத்தாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். கொலை நடந்த வீடு முழுவதும் அண்ணாமலையின் ரத்தம் உறைந்து தேங்கியிருந்தது. கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியை கைப்பற்றினர்.

மேலும், தப்பி ஓடிய கொலையாளி நந்தக்குமாரை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை (தாலுகா) மற்றும் கோகுல்ராஜ் (டவுன்) தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, பழனிச்சாமி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையை அமைத்து டி.எஸ்.பி. குத்தா லிங்கம் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார், தேடுதல் வேட்டையை தீவிர ப்படுத்தினர். நள்ளிரவு 11.30 மணியளவில் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த நந்தக்குமாரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

கொலை நடந்த நேரத்தில் இருந்து சுமார் 2 மணி நேரத்துக்குள் கொலையாளியை பிடித்த தனிப்படையினருக்கு டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பகலவன் வாழ்த்து தெரிவித்தனர்.

பிடிபட்ட நந்தக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

போராட்டமும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் பார்க்கவிடவில்லை என்ற காரணத்தால் தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!