கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு..!


காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 50க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, பார்க் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட ரயில்வே காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கூடுதலாக ரயில்வே போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ரசிகர்கள் செல்வதற்கு வசதியாக இரவு நேரத்தில் இரண்டு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 துணை ஆணையர்கள் தலைமையில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!