திருமணத்தில் இளம் பெண் திடீர் மாயம்- கல்லூரி மாணவி மணப்பெண் ஆனார்..!


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி சண்முகநாதன் மகன் நதீஷ் என்பவருக்கும், 4-ந் தேதி (நேற்று முன்தினம்) திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்த வேளையில், 3-ந் தேதி மணப்பெண் திடீரென மாயமானார்.

இதுகுறித்து ஆலங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமானது குறித்து தகவல் அறிந்த மாப்பிள்ளை வீட்டார், நிச்சயிக்கப்பட்ட அதே நாளில், வேறு பெண்ணை பார்த்து திருமணம் நடத்தியே தீருவது என்று முடிவு செய்தனர்.


அப்போது பாச்சிக்கோட்டையிலிருந்து வந்து, ஆலங்குடி படேல் நகரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை மாப்பிள்ளை வீட்டார் அணுகி அவரது மகள் தேவதர்ஷினியை (20) பெண் கேட்டனர். அதற்கு அவர், தனது மகள் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார். படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க முடியும் என்று கூறினர்.

அதற்கு மாப்பிள்ளை வீட்டார், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்கட்டும். மேலும் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறினர். மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தலை தட்ட முடியாத கார்த்திக்கும், அவரது குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

அதன்பிறகு 3-ந் தேதி இரவே நிச்சயம் செய்து, பெண்ணை அழைத்துக்கொண்டு குமரமலை முருகன் சன்னதியில் வைத்து நதீசுக்கும், தேவதர்ஷினிக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனாலும், தக்க சமயத்தில் கைகொடுத்த கல்லூரி மாணவி தேவதர்ஷினியை மாப்பிள்ளை வீட்டார் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!