காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு..!


காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதுஒருபுறமிருக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர் சங்க பேரமைப்பில் அங்கம் வகிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும்.

வணிகர் சங்க பேரமைப்பின் முழு அடைப்பு போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மருந்து மற்றும் மருந்து வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!