டுபாயில் உதயங்க வீரதுங்க மீண்டும் கைது – கொழும்புக்கு கொண்டு வருவதற்கு முயற்சி..!


ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, உதயங்க வீரதுங்கவை சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாக, டுபாய் அதிகாரிகளுடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பேச்சு நடத்தி வருகிறது.

முன்னதாக அமெரிக்கா செல்ல முயன்ற போது டுபாய் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், உதயங்க வீரதுங்கவைக் கைது செய்வதற்கான அனைத்துலக பிடியாணை நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!