குழந்தைக்கு பாலூட்டியபடியே பல்கலைத் தேர்வு எழுதிய ஆப்கன் பெண்.. வைரலான புகைப்படம்..!


குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு எழுதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கும் நாடான ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் துணிச்சலாக இந்த விஷயத்தை செய்தது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாய்குந்தி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜஹான் தாப். 25 வயதான இவர் 3 குழந்தைகளுக்கு தாய். இவரது கணவர் ஒரு விவசாயி. மனைவியை நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா உயர்நிலை கல்வி நிறுவனத்தில் சமூக அறிவியல் பட்டப் படிப்பில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். அண்மையில்தான் இவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத் தேர்வுகள் அண்மை யில் நடைபெற்றன. தனது 2 மாத கைக்குழந்தையுடன் தேர்வெழுத கணவருடன் வந்தார் ஜஹான் தாப்.


தேர்வின்போது குழந்தை யைக் கணவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். தேர்வுக்கு இடையே குழந்தை அழத் தொடங்கியதும் கணவர் செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டதும், தேர்வுக் கூட பொறுப்பாளரின் அனுமதியுடன் கைக் குழந்தையை தேர்வுக் கூடத்துக்குள் ஜஹான் தாப் கொண்டு வந்தார். பின்னர் தேர்வு மேஜையிலிருந்து கீழே இறங்கி சம்மணமிட்டு உட்கார்ந்து குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு தாய்ப்பாலூட்டினார். பால் குடித்தபடி தூங்கிய குழந்தையை மடியில் வைத்தபடி தேர்வை ஜஹான் தாப் எழுதி முடித்தார் .

குழந்தைக்கு பாலூட்டியபடி ஜஹான் தேர்வெழுதுவதை பார்த்த பல்கலைக்கழக பேராசிரியர் யாஹ்யா இர்பான், அதைப் புகைப்படமாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த பலரும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் புகைப்படம் பரவி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியே வருவதற்கே அஞ்சி வரும் நிலையில், ஜஹான் தாப், தைரியமாக வெளியே வந்து தேர்வெழுதி மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். குழந்தைக்குப் பாலூட்டியபடி அவர் தேர்வு எழுதிய விஷயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.-Source: tamil.thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!