விளம்பி ஆண்டாக தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது… பஞ்சாங்கம் என்ன சொல்கிறது…?


தமிழ் ஆண்டு கணக்குப் படி பஞ்சாங்கத்தில் தற்போது நடந்து கொண்டு இருப்பது ஹேவிளம்பி. இது வரும் ஏப்ரல் 14ஆம் தேதியுடன், அதாவது தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாளுடன் முடிவடைந்து, விளம்பி ஆண்டாக தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது.

இதற்கேற்ப பஞ்சாங்கம் குறிப்பது உண்டு. பஞ்சாங்க கணிப்புகள் சில நேரங்களில் போய்த்துவிடுவதும் உண்டு. பல சம்பவங்கள் சரியாக நடப்பதும் உண்டு. கடந்த 2017ம் ஆண்டில் இயற்கைச் சீற்றக் குறிப்புகள் சரியாகவே இருந்தன. மழை, வெள்ளம், ஓகி புயல் குறித்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றிருந்தன. கடந்த 2016ல் ஒரு தினக் காலாண்டரில் கூட, ஒரு அறையில் தலைவரின் மரணம், மறு அறையில் வாரிசு சண்டை குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நாளில்தான், முதல்வர் ஜெயலலிதாவும் மரணம் அடைந்து இருந்தார். பெரும்பாலும் பஞ்சாங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க யாரும் முன் வராத நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் பஞ்சாங்கத்தை திரும்பி பார்க்க வைத்தது.

விளம்பி தமிழ் ஆண்டு
இந்த நிலையில் 2018ல் வரும் விளம்பி வருடம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை உலகம் சுபிட்சமாக இருக்கும் என்றும் சரியான நேரத்தில் மழை பெய்யும் என்றும் தங்க நகை விலையில் சரிவு இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு வங்கக் கடலில் 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் நன்றாக இருக்கும். பணத்தட்டுப்பாடு வராதாம். ஆனால், மீண்டும் புதிய ரூபாய் நோட்டு அறிமுகமாகுமாம்.

அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்கும். தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணும். வியாபாரம் நிலையற்று இருக்கும். வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படும்.

தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம். வெப்பம் அதிகம் நிலவும், சாலை விபத்துகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது பஞ்சாங்கம்.

பொருளாதா வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன பலன் நடந்தாலும் மக்கள் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பது வேறு விஷயம். சென்னை வெள்ளத்தை மீறி எதுவும் நடந்துவிடாது. அதையே சந்தித்து விட்டோம். இருந்தாலும், ஆர்வம் மிகுதியால் இந்தத் தகவல்களை நாம் ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருகிறோம்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!