புதிய கட்சியின் அறிவிப்பை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் – ஏமாற்றிய ரஜனி..!


ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக புதிய நிர்வாகிகளை நியமிக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். ஆன்மீக பயணத்தின் போது அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்த்ததுடன் நான் இன்னும் முழுநேர அரசியல் வாதியாகவில்லை என்று கூறினார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களிலும் அனலாய் கொதித்தது. இந்த நிலையில் சென்னை திரும்பியதும் போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வைத்து பேட்டி அளித்த ரஜினி, காவிரி பிரச்சினை, ராம ரத யாத்திரை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக தொடர்ந்து வெளியாகி வந்த தகவல்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

அன்றைய தினம் புதிய கட்சியை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் தமிழ்புத்தாண்டில் புதிய கட்சியை ரஜினி தொடங்குவார் என்று காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மே மாதம் ரஜினி புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். புதிய கட்சியின் தொடக்க விழா சென்னை அல்லது கோவையில் நடைபெறும் என்று தெரிகிறது. புதிய கட்சியை தொடங்கும் முன்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் புதிய கட்சிக்காக ரஜினி அடித்தளம் போட்டு வருகிறார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி முடிக்கப்படுகிறது. இதன் பின்னர் தமிழ் புத்தாண்டுக்குள் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!