ஜெயலலிதா கைரேகை விவகாரம் – பெங்களூருக்கு திரும்ப அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!


கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது பெங்களூர் சிறை பதிவேடுகளில் இருக்கும் ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு வெளியான அன்றே ஏ.கே.போஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

மேலும், பெங்களூர் சிறையிலிருந்து பெறப்பட்ட கைரேகையை திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!