தீவிரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.72 கோடி பரிசு- அமெரிக்கா அறிவிப்பு..!


அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு அல் கொய்தா பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை அழிக்க கடந்த 15 ஆண்டுகளாக அங்கு அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது.

தொடர்ந்து நடந்த கடும் போருக்கு பிறகு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தலிபான் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்பினர் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

எனவே ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் பாகிஸ்தானின் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா தலைக்கு அமெரிக்கா ரூ.32 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

மவுலானா பசுல்லா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு இந்த பரிசு தொகை வழங்கப்படும். இது தவிர ஜமாத்-உல்-கஹ்ரார் அமைப்பின் தலைவர் அப்துல்வாலி மற்றும் லஷ்கர்- இ-இஸ்லாம் தலைவர் மங்கள் பஹ் குறித்து தகவல் தருவோருக்கு தலா ரூ.20 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி 150 பள்ளி குழந்தைகளை கொன்றவன். மேலும் 2012-ம் ஆண்டில் பள்ளி மாணவி மலாலா பூசுப்சாயை சுட்டுக்கொல்ல முயன்றவன் ஆவான்.

ஜமாத்-உல்- கஹ்ரார் என்ற பயங்கரவாத இயக்கம் தலிபான் இயக்கத்தில் இருந்து பிரிந்தது. லஷ்கர்-,இ- இஸ்லாம் பாகிஸ்தானின் கைபர் மலைப் பகுதியில் உருவானது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!