ஜெயலலிதாவின் உயில் – சசிகலா குடும்பத்தினரிடம் விசாரணை…!


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயில் எங்கு உள்ளது என்பது குறித்து சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 3-வது நாளாக தொடரும் மெகா வருமான வரித்துறை சோதனை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூலம் ஒரே குடும்பத்தில் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட முதல் மிகப்பெரிய சோதனையும் இதுதான்.

சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


ஒரே குடும்பத்தினரிடம் இவ்வளவு சொத்துக்களா என்ற மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டது? வருமானத்துக்கான வழிகள் என்ன? என்பது போன்ற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் சோதனைதான். வழக்குகளை சந்திக்கலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் இருந்தது. எனவே சட்டப்படி சந்திப்போம் என்று தைரியமாக தெரிவித்து வந்தனர். ஆனால் வருமான வரித்துறையின் கிடுக்கிப்பிடி சோதனைகளும், விசாரணைகளும் நீண்டு கொண்டே செல்கிறது.

அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா சம்பந்தப்பட்ட பல தகவல்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சில முக்கிய ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் கேள்வி எழுப்பியது அவர்களை அதிர வைத்துள்ளது.

டாக்டர் சிவக்குமார் வீட்டில் நடந்த சோதனையில் ஜெயலலிதா உடல்நிலை, மருத்துவக் குறிப்புகள் கம்ப்யூட்டரில் என்னென்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்தனர்.


ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எந்த நிலையில் இருந்தார் என்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதில் பல்வேறு சர்ச்சைகளும், மர்ம முடிச்சுகளும் அவிழாமல் உள்ளன.

இந்த நிலையில் வீடியோ பதிவு இருப்பதாக புகழேந்தி தெரிவித்தார். அந்த பதிவையும் புகழேந்தியிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதையடுத்து வீடுகளில் சல்லடை போட்டு தேடினார்கள். புகழேந்தி குடும்பத்தினரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

முக்கியமாக ஜெயலலிதா எழுதிய உயில் எங்கே? அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள், அதற்கான ஒரிஜினல் ஆவணங்கள் எங்கே இருக்கிறது என்பதைத்தான் அதிகாரிகள் தீவிரமாக தேடுகின்றனர்.

ஆனால் இன்னும் அது பற்றிய தகவல்களை அதிகாரிகளால் பெற முடியவில்லை. ஆனால் இந்த சோதனைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்கள் விலகவும் அடிப்படையாக கருதுவது உயிலைத் தான். எனவே உயிலை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!