ரூ.6 கோடி பணம் – ரூ.2 கோடி தங்க நகைகள் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பறிமுதல்…!


சசிகலா உறவினர்கள் வீடுகள் உள்பட 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 கோடி ரொக்கப் பணம், ரூ.2.4 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ தங்கம்-வைர நகைகளை வருமான துறையினர் பறிமுதல் செய்தனர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவிலான சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கிறார்.

அவரது உறவினர்களான டி.டி.வி.தினகரன், திவாகரன், விவேக், டாக்டர் சிவகுமார் ஆகியோர் சசிகலாவுக்கு பக்க பலமாக செயல்பட்டு வந்தனர். சசிகலா சிறைக்கு சென்ற பின்பு அவரது சொத்துக்கள், நிறுவனங்களை இவர்கள் தான் கவனித்து வந்தனர்.

அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஊடகங்களான நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. ஆகியவற்றையும் தங்கள் வசம் கைப்பற்றிக் கொண்டு நிர்வகித்து வருகிறார்கள். மறைமுக அரசியலில் ஈடுபட்டு வந்த இவர்கள் பெருமளவில் பணம் – சொத்துக்களை வைத்துக் கொண்டு நேரடி அரசியலுக்கு ஆயத்தமாகி வந்தனர்.

டி.டி.வி.தினகரன் ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கினார். அதன் பிறகு இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கினார்.


இந்த நிலையில் கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் சசிகலா குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் தொடங்கி அதில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து இருப்பதை சி.பி.ஐ., வருமான வரி, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தன. இதையடுத்து சசிகலா குடும்ப உறுப்பினர்களை வருமான வரித்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் அவர்கள் அதிரடி சோதனை நடவடிக்கையில் இறங்கினர். சசிகலா, திவாகரன், தினகரன், விவேக் உள்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்பட பலரது வீடுகளில் இந்த சோதனை நடந்தது. சென்னை, மன்னார்குடி உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகம், புதுவை மாநிலங்களிலும் மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கணக்கில் வராத பல கோடி பணம், தங்கம் – வைர நகைகள், சொத்து ஆவணங்கள், 60 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் சிக்கியது. நீலாங்கரையில் உள்ள தினகரனின் சகோதரர் பாஸ்கரன் பங்களாவில் 7 கிலோ தங்க நகைகளும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

3 நாட்கள் நடந்த சோதனையில் திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் பணம் – தங்கம், வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மன்னார்குடி சுந்தரகோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது.


இங்கு வருமான வரித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள். அந்த கல்லூரியில் பயன் படுத்தப்படாத விடுதி அறைகள் பூட்டிக் கிடந்தன. அவற்றை திறக்கச் சொல்லி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரூ.6 கோடி ரொக்கப் பணம், ரூ.2.4 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ தங்கம் – வைர நகைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.

மேலும் உரிமையாளர்கள் யார் என குறிப்பிடப்படாமல் மொத்தம் ரூ.1,200 கோடிக்கான சொத்து மற்றும் முதலீடுகளுக்கான ஆவணங்களும் சிக்கியது. மேலும் மற்றொரு செயல்படாத விடுதி அறையில் பல கோடி மதிப்புள்ள வைர நகைகள், விலை உயர்ந்த சுவீஸ் கடிகாரங்களும் சிக்கியது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட வைர-தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் சொத்து விவரங்களையும், போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களையும் அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து வருமான வரி சோதனை நீடிப்பதால் சசிகலா உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சோதனை நீடிப்பதால் அனைவரும் 3-வது நாளாக வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!