இன்னும் சில நிமிடங்களில் அரசு மரியாதையுடன் விடை பெறப் போகிறார் நடிகை ஸ்ரீதேவி..!


துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, துபை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் உடலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரிடம் துபை அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒப்படைத்தனர். அதன் பின் ஸ்ரீதேவியின் உடல், ‘எம்பாமிங்’ எனப்படும் பதப்படுத்துதல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

‘எம்பாமிங்’ முடிந்ததும் துபை விமான நிலையத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு, மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு மும்பைக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது.

ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் உள்ள செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9.30 முதல் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் உடலுக்குப் பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், சோனம் கபூர், ஹேமா மாலினி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். ரசிகர்களும் வரிசையில் நின்று ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அஞ்சலிக்குப் பின், ஸ்ரீதேவியின் உடல் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் மயானத்தை அடையும். அங்கு மாலை 3.30 மணி அளவில் உடல் தகனம் செய்யப்படும்.

மஹாராஷ்டிர அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. ஸ்ரீதேவி உடலின் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!