கார்த்தி சிதம்பரம் சென்னையில் திடீர் கைது – சிபிஐ அதிரடி நடவடிக்கை..!


ப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்திருக்கிறார். இதற்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.


இந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்னர் முன்ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. பின்னர் அவரை கைது செய்தனர். அவரை இன்று மாலை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கைது நடவடிக்கை பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!