ஜெ. மரண விசாரணை ஆவணங்களை பெற ஆணையத்திற்கு வந்த சசிகலாவின் வக்கீல்…!


ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆவணங்களை பெறுவதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று ஆணையத்திற்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மருத்துவர்கள், உறவினர்கள், வீட்டு வேலை செய்தவர்கள் என பலரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் ஆஜராக வேண்டும் என டிசம்பர் 21-ந்தேதி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

இதையடுத்து சசிகலா தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி, சசிகலா ஆஜர் ஆவதில் சிரமம் உள்ளது என்றும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை எழுத்துபூர்வமாக பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு குற்றச்சாட்டு கூறியவர்கள் அதனை எழுத்து பூர்வமாக தரவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 14 ஆவணங்கள் மட்டுமே சசிகலா வக்கீலிடம் வழங்கப்பட்டன.

மீதமுள்ள 400-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இதுவரையில் கொடுக்கப்படாமல் இருந்தன. அந்த ஆவணங்களை வாங்குவதற்காக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்திற்கு இன்று வந்தார்.

மொத்த ஆவணங்களையும் தரும்படி கேட்டார். நீதிபதி ஆறுமுகசாமி இன்று இல்லாததால் பதிவாளர் சோபனாவிடம் விவரங்களை கேட்டறிந்தார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!