இம்ரான் கானின் இரண்டாவது மனைவி பாகிஸ்தானை விட்டு வெளியேற்றம்… பின்ணனியில் அதிர்ச்சி…!


பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானின் இரண்டாவது மனைவி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளினி ரேஹம் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார்.


இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் இம்ரான் கான் புஷ்ரா பிபி மேனகா என்ற ஆன்மீக ஆலோசகரை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அப்போது இம்ரான் கான் அந்த செய்தியை மறுத்தார். இந்நிலையில், மேனகாவை எளிமையான முறையில் லாகூரில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே அவரது இரண்டாவது மனைவியான ரேஹம் கான் சமீபத்தில் பிரட்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அவருக்கும், இம்ரான் கானுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பேசினார்.

இதையடுத்து ரேஹம் கானை சிலர் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போனில் பேசியவர்கள் ‘இம்ரான் கான் குறித்து யார் பேசினாலும், அவர்கள் வெடித்து சிதறுவார்கள்’, என மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து ரேஹம் கான், உயிருக்கு பயந்து பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!