பழங்குடி இளைஞரை அடித்துக் கொன்று செல்ஃபி எடுத்த கொடூரம்! கேரளாவில் பயங்கரம்..!


கேரளாவில் திருடன் என நினைத்து பழங்குடியின இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கடுகுமண்ணா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மது (27). அந்தப் பகுதி கடைகளில் புகுந்து திருடியதாக அவர்மீது வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு கடையில் நடந்த திருட்டு தொடர்பாகச் சந்தேகப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் காட்டின் உள்சென்று அந்த இளைஞரை சிறைபிடித்ததுடன், அவரை நகர் பகுதிக்கு அழைத்து வந்த பொதுமக்கள் அவரின் உடைமைகளைச் சோதித்தனர்.

ஒருகட்டத்தில் அவரின் கைகளைக் கட்டி அடித்த பொதுமக்கள் பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல்நிலையம் அழைத்து சென்றபோது போலீஸ் வாகனத்தில் இளைஞர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர் பாதியிலேயே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடித்தவர்களைக் கைது செய்யும் வரை இளைஞரின் உடலை வாங்கப்போவதில்லை என அவரின் அம்மா தெரிவித்துள்ளார். எனினும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ஆதிவாசியை அடிக்கும் முன்னர் பொதுமக்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. திருடன் என நினைத்து பழங்குடி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!