விரைவில் இந்தியாவில் செல்போன் எண்களில் புதிய மாற்றம்…!


இந்தியாவில் செல்போன் எண்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என்று பொதுத்துறை தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 13 இலக்க செல்போன் எண்களை வழங்கும் பணிகளை துவங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 8 ஆம் தேதி இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பி.எஸ்.என்.எல். மூத்த அதிகாரி கூறியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொலைத்தொடர்பு துறை வழிகாட்டுதலையடுத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயனாளர்களின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன் எண்களை 13 இலக்க எண்களாக மாற்றும் நடைமுறைகள் துவங்கப்படும் எனவும் இந்த பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து புதிய செல்போன் எண்களும் 13 இலக்கங்களிலேயே வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவு திட்டமிட்டபடி அமல்படுத்தப்படுமேயானால், அதிக இலக்கங்களை கொண்ட செல்போன் எண்களைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா மாறும். சீனாவில் தற்போது, 11 இலக்க செல்போன் எண்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இது தவிர பிராஞ்சு பிராந்திய பகுதிகளில் உள்ள சில நாடுகளில் நீண்ட இலக்கங்களை கொண்ட செல்போன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!