தங்கச் சங்கிலியை கொடுக்க மறுத்த பெண்ணுக்கு வாலிபரால் நிகழ்ந்த கொடூரம்…!


தூத்துக்குடியில் காரில் கடத்தி இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரப்பேரி ஜோதிநகர் காட்டுப்பகுதியில் ஒரு இளம்பெண் இறந்த நிலையில் கிடந்தார். அவர் அருகே 2½ வயது சிறுவன் நின்று கொண்டு இருந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி உமாமகேசுவரி (வயது 30) என்பது தெரியவந்தது.

மாரியப்பன், கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இதனால் உமாமகேசுவரி தூத்துக்குடியில் தனது மாமனார், மாமியார் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் உமாமகேசுவரியிடம், அவருடைய உறவினரான பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ரகுமத்நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவசுப்பிரமணியன் என்ற சுரேஷ் (27) என்பவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.

சுரேஷ் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணம் தேவைப்பட்டு உள்ளது. இதனால் சுரேஷ், உமாமகேசுவரியிடம் பணம் கேட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதற்கு உமாமகேசுவரி தன்னுடைய வளையல்களை தருவதாக கூறி உள்ளார். இதனால் சுரேஷ் பாளையங்கோட்டையில் இருந்து தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்து உள்ளார்.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தனது மகனுடன் நின்று கொண்டு இருந்த உமாமகேசுவரியை காரில் ஏற்றிக் கொண்டு சங்கரப்பேரி காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளார்.

அங்கு வைத்து உமாமகேசுவரி 2 பவுன் வளையல்களை கொடுத்து உள்ளார். ஆனால் சுரேஷ் தங்கசங்கிலியையும் தருமாறு கூறி உள்ளார். அதற்கு உமாமகேசுவரி மறுத்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், உமாமகேசுவரியின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிப்காட் போலீசார் சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் மற்றும் தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, எனக்கு கார் விற்பனை தொழிலுக்கு பணம் தேவைப்பட்டது. உமாமகேசுவரி எனது உறவினர் என்பதால் செல்போனில் பேசி பணம் கேட்டேன். நகைகளை தருவதாக கூறினார்.

இதனால் காரில் தூத்துக்குடி வந்தேன். அவர் 2 வளையல்களை மட்டும் தந்தார். தங்கசங்கிலியை கேட்ட போது, தரமறுத்து விட்டார். இதனால் அவரை கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!