பாலாடைக்கட்டிகளின் அடியில் சிக்கி உயிரிழந்த தொழிலதிபர்!

சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான உணவுப்பொருள். ஐரோப்பாவின் சீஸ் தேவைகளில் பெரும்பகுதியை இத்தாலி பூர்த்தி செய்கிறது.

கிரானா படானோ மற்றும் பார்மிஜியானோ ரெகியானோ எனும் சீஸ் வகைகள் இத்தாலியில்தான் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இத்தொழிலில் அங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறு தொழிற்சாலைகளை அமைத்து ஈடுபட்டு வருகின்றன.

அங்கு கிரானா படானோ சீஸ் தயாரிப்பில் 74 வயதான கியாகோமோ சியாப்பரினி என்பவரின் குடும்பமும் இந்த தொழில் செய்து வந்தது.

இவரது சீஸ் தொழிற்சாலையின் குடோன் இத்தாலியின் பெர்காமோ நகருக்கு அருகே ரொமானோ டி லொம்பார்டியா பகுதியில் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 50 கிரானோ படானோ பாலாடைக்கட்டி அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு சுமார் 33 அடி வரையில் உயரம் உள்ள உலோக ரேக்குகளில் இவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.


இவற்றை 3 தினங்களுக்கு முன் கியாகோமோ ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு அலமாரி உடைந்தது. உடைந்த அலமாரி மற்றொரு அலமாரியை தள்ளி, ஒரு சங்கிலி தொடர் போல் ஒன்றின் மேல் ஒன்றாக அவர் மேல் அலமாரியிலுள்ள பாலாடைக்கட்டிகள் விழுந்தன.

இதில் அவர் பாலாடைக்கட்டிகளுக்கு அடியில் சிக்கினார். அவர் மேல் ஆயிரக்கணக்கில் பாலாடைகட்டிகள் விழுந்தன. தகவல் அறிந்த அதிகாரிகள் உடனே அவரை காப்பாற்ற விரைந்து வந்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அவரது உடலை அவருடன் பணிபுரியும் அவரின் குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். அவர் உடலை கண்டுபிடித்து வெளியில் எடுக்கவே ஆயிரக்கணக்கில் பாலாடைக்கட்டிகள் மற்றும் அலமாரிகளை கையால் நகர்த்த வேண்டியிருந்ததாகவும், சியாப்பரினியின் உடலை கண்டுபிடிக்க சுமார் 12 மணிநேரம் ஆனதாகவும் அவரை மீட்க வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயந்திரக் கோளாறு அல்லது பொருட்களின் தேய்மானம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், முதல் உலோக அலமாரி எவ்வாறு சரிந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!