பசியால் மாடியில் இருந்து குதித்த 8 வயது சிறுமி- அமெரிக்காவில் பயங்கரம்!

பசிக்கு உணவளிக்காமல் தவிக்கவிட்ட பெற்றோரிடமிருந்து தப்பிக்க ஒரு 8 வயது சிறுமி, தனது பொம்மையை கையில் பிடித்தபடி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார்.

அதன் பின்னர் உணவுக்காக அனைவரையும் கெஞ்சியிருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் அர்னால்ட்ஸ்பர்க் பகுதியில் வசித்து வருபவர்கள், ரியான் கீத் ஹார்ட்மேன் (33) மற்றும் எல்லியோ எம். ஹார்ட்மேன் (33) தம்பதியர்.

இவர்கள் தங்களின் 8 வயது மகளுக்கு நீண்ட நாட்களாக குறித்த நேரத்தில் உணவளிக்காமல் இருந்திருக்கின்றனர். மேலும் அந்த சிறுமியை மாடியிலிருந்து கீழே வரவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கவில்லை.

இதனை பொறுத்து கொள்ள முடியாத அந்த சிறுமி, பசி தாங்க முடியாமல் தனது வீட்டின் இரண்டாம் தளத்து ஜன்னலிலிருந்து டெட்டி பியர் (Teddy Bear) பொம்மையுடன் கீழே குதித்தார்.

வெறும் கால்களுடன் நடந்த அச்சிறுமி அருகில் உள்ள ஃபேமிலி டாலர் கடைக்கு சென்று அங்குள்ள பணியாளர்களிடம் உண்பதற்கு ஏதேனும் உணவு கேட்டு கெஞ்சியிருக்கிறாள். “என் பெற்றோருக்கு நான் தேவைப்படவில்லை. எனக்கு பசிக்கிறது.

நான் சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா?” என அவள் கேட்டதாக கெல்லி ஹட்சின்ஸன் எனும் அக்கடை பணியாளர் ஒருவர் கூறினார். “எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அச்சிறுமி பசிக்கு உணவு கேட்டு வந்தது என் இதயத்தை உடைத்துவிட்டது.

எந்த குழந்தைக்கும் ‘தான் யாருக்கும் தேவைப்படவில்லை’ எனும் எண்ணம் வரக்கூடாது” என்றார் சாண்ட்ரா நிக்லி எனும் இன்னொரு பணியாளர்.

ஒரு வாரத்திற்கும் மேல் அச்சிறுமியை அறையில் வைத்து அவளின் பெற்றோர் பூட்டி வைத்து உணவு தராமல் துன்புறுத்தி வந்ததாகவும், உடன்பிறந்தவர் ஒருவர் கொடுத்த சாண்ட்விச் ஒன்றை 3 நாட்களுக்கு முன் உண்டதாகவும் அச்சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கு அலமாரிகளிலும், சமையலறையிலும் மற்றும் குளிர்சாதன பெட்டியிலும் ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அதிகாரிகள் போதை மருந்து சம்பந்தமான பொருட்களையும் கண்டெடுத்ததாக தெரிகிறது. குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பு, அச்சிறுமியையும் மேலும் 3 குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் அழைத்து சென்றுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தாய், தந்தை இருவரும் தலா ரூ.80 லட்சம் பிணையில் மட்டுமே வெளியே வர முடியும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!