மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள்… பின்ணனியில் அதிர்ச்சி…!


ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்தபோது மின்சாரம் தடைபட்டதால், டாக்டர்கள் தங்களிடம் இருந்த மொபைல் போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஆபரேஷன் செய்து முடித்தனர்.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் குண்டூரில் அரசு மருத்துவமனை உள்ளது. நாய் கடித்ததால் சேதமடைந்த மூக்குப்பகுதிக்கு சிகிச்சை பெற நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனைக்கு வந்தார்.

அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 10-ம் தேதி மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டதால், ஆபரேஷன் மேஜையில் இருந்த விளக்கு அணைந்து போனது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட டாக்டர்கள் தங்களிடம் இருந்த மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்தனர்.

அந்த வெளிச்சத்தில் நோயாளிக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து முடித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆபரேஷன் தியேட்டரில் மின்சாரம் இல்லையென்றாலும் செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் என்ன காரணத்துக்காக அங்குள்ள விளக்குகள் எரியவில்லை என தெரியவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு பழுதான விளக்குகள் மாற்றப்பட்டு விட்டன என்றார்.

இதுகுறித்து மூத்த டாக்டர்கள் கூறுகையில், மின்சாரம் நின்றுபோனாலும் சமயோஜிதமாக செயல்பட்டு மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷனை வெற்றிகரமாக செய்த டாக்டர் சுனிதா மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!