சூலூர் அருகே தனியார் மில் வளாகத்தில் 7 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த அத்தை கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
7 வயது சிறுவன் சாவு
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 30). இவருடைய மனைவி கைரொன்னிஷா (28). இவர்களது மகன் கைரல் இஸ்லாம் (7). இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தனர்.
பின்னர் ஜாகீர் உசேனும், அவரது மனைவியும் சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்தனர். மேலும் அங்குள்ள குடியிருப்பில் தங்கினர்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் வீட்டில் இருந்தான். இந்த நிலையில் மதியம் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டிற்கு சாப்பிட வந்தனர்.
அப்போது வீட்டில் மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவனை சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்ததால் இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் பனியன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிறுவன் கொலை செய்யப்பட்டது மில் வளாகம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வரவாய்ப்பு இல்லை என்பதால், மில்லில் உள்ளவர்களிடம் விசாரணையை போலீசார் தொடங்கினர். இதில் ஜாகீர்உசேன் அக்காவும், சிறுவனின் அத்தையுமான நூர்ஜாகதுன் (32) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அத்தை கைது இதனால் சந்தேகமடைந்த போலீசார் நூர்ஜாகதுனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனியார் மில் வளாகத்தில் 7 வயது சிறுவனை அவரது அத்தையே கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘
தாயின் மீதுள்ள கோபத்தில் சிறுவனை கொன்றேன் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் சிறுவனின் கொலை வழக்கில் கைதான நூர்ஜாகதுன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நூர்ஜாகதுன் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சூலூரில் உள்ள மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அவர் தனது 7 வயது மகள் மற்றும் கணவருடன் மில் வளாகத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது அண்ணன் ஜாகீர்உசேன் குடும்பத்தையும் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர்களும் மில் வளாகத்தில் தங்கியிருந்தனர். அப்போது நூர்ஜாகதுன் மகளும், ஜாகீர்உசேன் மகனும் ஒன்றாக விளையாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஜாகீர்உசேன் மனைவி கைரொன்னிஷாக்கும், நூர்ஜாகதுனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை அறிந்த மில் உரிமையாளர் நூர்ஜாகதுனை யூனிட்-1 ல் இருந்து யூனிட்-2 வுக்கு மாற்றினார். தான் வேலைக்கு சேர்த்துவிட்ட கைரொன்னிஷா தனக்கு எதிராக இருப்பது நூர்ஜாகதுனை ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவருக்கு தன் அண்ணன் குடும்பம் மீது கோபம் ஏற்பட்டது. இதனால் தன் மகளுடன் ஜாகிர் உசேன் மகனான 7 வயது சிறுவன் கைரல் இஸ்லாம் விளையாடுவது அவருக்கு பிடிக்கவில்லை.
இதனால் சிறுவனை பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை. இது நூர்ஜாகதுனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நூர்ஜாகதுன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மகளும், கைரஸ் இஸ்லாமும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அவர் தனது மகளை அங்கிருந்து போகச்சொல்லிவிட்டு, அங்கு கிடந்த பனியன் துணியால் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல வேலைக்கு சென்றுவிட்டார்.
போலீசார் விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார். வேலைக்கு வந்த இடத்தில் பெரியவர்களுக்குள் ஏற்பட்ட தகராறுக்கு ஒன்றும் அறியாத 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!