பனிப் பாறைகளுக்கு போர்வையா..? உருகுவதை தடுக்க சீனாவில் புதிய முயற்சி!

புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் நீராய் உருகுவது தொடர்ந்தால், சில தசாப்தங்களில் அவைகள் காணாமல் போய்விடும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வந்தனர்.


இந்நிலையில், வடமேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், வேகமாக உருகும் டாகு எனும் பனிப்பாறையின் 5,382 சதுர அடி பகுதியை சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி என கருதப்படும் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை (geotextile blankets) பயன்படுத்தி ஒரு குழு மூடியது.

இதன்மூலம் சூரியக்கதிரில் இருந்து பாதுகாக்கப்பட்டு, பாறைகள் வெப்பமடைவது குறைந்து உருகுதல் நிற்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மிதமான பனிப்பாறை (temperate glacier) வகையை சேர்ந்தது டாகு பனிப்பாறை. இது திரவ நீர் மற்றும் பனிப்பாறை பனி இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் இது தற்போது உடனடியாக உருகும் நிலையை அடைந்துவிட்டது. ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் ஃபீடெங்க் என்பவரின் கருத்துப்படி, இது வழக்கமான ஆல்பைன் பனிப்பாறைகளை விட வேகமாக உருகுகிறது.

தற்போது நடைபெறும் இந்த முயற்சி, இதற்குமுன் ஒருமுறை சீன அறிவியல் அகாடமி ஆகஸ்ட் 2019-ல் அதே பனிப்பாறையின் 5382 சதுர அடி பரப்பளவில் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளால் மூடிய ஒரு வெற்றிகரமான பரிசோதனையின் தொடர்ச்சியாகும்.


அப்பொழுது இரண்டரை மாதங்களுக்கு பிறகு, பாதுகாப்பற்ற பகுதிகளைவிட போர்வையிடப்பட்ட பகுதியில் 3.2 அடி அளவிற்கு தடிமன் கொண்ட பனிக்கட்டி இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த முயற்சிக்கு தலைமை ஏற்றுள்ள நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரான ஜு பின் (32 வயது) “பூமி வெப்பமடைந்து கொண்டே இருந்தால், இறுதியில் பனிப்பாறைகளை எப்போதுமே பாதுகாக்க வழியேதும் இல்லை” என எச்சரித்துள்ளார்.

ஜூ தலைமையிலான குழு இம்முறை 93%-க்கும் அதிகமான சூரிய ஒளியை தடுக்கும் திறனைக் கொண்டுள்ள ஒரு புதிய பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட போர்வையால் இந்த பரிசோதனையை செய்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை நார்ச்சத்தான செல்லுலோஸ் அசிடேட் மூலம் இந்த போர்வையின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் குறித்து மற்றொரு ஆராய்ச்சியாளரான வாங் ஃபெய்டெங், “இந்த போர்வையால் மூடும் முயற்சி பனிப்பாறையின் மேற்பரப்பில் சூரிய கதிர்வீச்சு மற்றும் வெப்ப பரிமாற்றத்தை தடுக்கும் திறனை கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் பனிப்பாறை உருகுவதை நிறுத்துவதற்கான வழிகளைக் காட்டிலும் உருகுவதற்கான காரணங்களை அறிய கவனம் செலுத்துகின்றன” என தெரிவித்தார்.

இந்தத் திட்டமானது உள்ளூர் சுற்றுலாப் பணியகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

டாகு பனிப்பாறையினால் அதனை சுற்றி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதும், நீர் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.

இதுமட்டுமின்றி, திபெத் பீடபூமி (Tibetan platueau) பகுதியில் அமைந்துள்ள டாகுவின் கம்பீரமான காட்சிகள் ஆண்டுக்கு 2 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்யும் தொழிலுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது.

இப்போது புவி வெப்பமடைந்து பனிப்பாறை உருகுவது தொடர்ந்தால், இவை அனைத்தும் சில வருடங்களில் அழிந்து விடும் அபாயம் உள்ளது. உலகெங்கிலும் இதுபோன்ற முயற்சிகள் பல நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எடுத்துக்காட்டாக 2009 முதல் ரோன் பனிப்பாறை (Rhone Glacier) அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் தெற்கு சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளுக்கு சென்று அந்த இடத்தை வெள்ளை வெப்பப் போர்வைகளால் போர்த்துகின்றனர்.

2020-ல் இத்தாலியின் ப்ரெசேனா பனிப்பாறை (Presena Glacier) தார்பாலின் கொண்டு மறைக்கப்பட்டு பலனளிக்கப்பட்டது.

திபெத்திய பீடபூமி தற்போதிருக்கும் உயரத்தை அடைய பல கோடி வருடங்கள் ஆன நிலையில், கடந்த 50 வருடங்களில் 15%க்கும் அதிகமாக பனிப்பாறைகளை இழந்திருக்கின்றது.

எனவே இது அவசியமான முயற்சி என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!