புதினே கண்டு பயப்படும் வாக்னர் கூலிப்படை தலைவனுக்கு இவ்வளவு சொத்துக்களா..?

ரஷியாவில் தற்போது வாக்னர் கூலிப்படையானது கலைக்கப்பட்டு, அதன் தலைவன் பிரிகோஜின் நாடு கடத்தப்பட்டாலும், பல ஆயிரம் சொத்துக்களுக்கு அவர் அதிபதி என்றே கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவின் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.

எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படை, கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவியதுடன், சில இடங்களில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.

இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது.

அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில், வாக்னர் அமைப்பினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை திரும்பியது ரஷியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

கிளர்ச்சியாளர்கள் மாஸ்கோ நகருக்குள் புகுந்து தாக்குவார்கள் என கூறப்பட்டது. உள்நாட்டு கலகம் ஏற்படும் சூழல் காணப்பட்டது. எனினும், அந்த அமைப்பினரை கடுமையாக எச்சரிக்கும் வகையில், ரஷிய அதிபர் புதின் பேசினார். அதன்பின் சமரசம் ஏற்பட்டு உள்ளது.

1990-ம் ஆண்டில் இருந்து புதின் மற்றும் பிரிகோஜின் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்களாக இருந்தனர். அதன்பின், ரஷிய அரசிடம் இருந்து ஓட்டலுக்கான ஒப்பந்தங்களை பெரிய அளவில் பெற்று பிரிகோஜின் பெரிய செல்வந்தரானார்.

கிழக்கு உக்ரைனில் தொன்பாஸ் நகரில் 2014-ம் ஆண்டில் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாத இயக்க செயல்பாட்டுக்கு பின்னர், பிரிகோஜின் கூலிப்படை தலைவராக மாறினார்.

பிரிகோஜின் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்த காரணத்தால் துரோகி என கட்டாய நாடு கடத்தலுக்கு இலக்காகி உள்ளார். பிரிகோஜின் சொத்துக்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

பிரிகோஜினுக்கு சொந்தமாக சொகுசு விமானம் ஒன்றும், ஆடம்பர படகு மற்றும் வைர சுரங்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் முறைகேடான அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான் பிரிகோஜின் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படை செயல்படும் நாடுகளில் இருந்து வைரம், தங்கம், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை கொள்ளையடிப்பதே இவர்களின் இன்னொரு தொழில் என்றும் கூறப்படுகிறது.

பிரிகோஜினின் தனிப்பட்ட சொத்து மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு மட்டும் ரஷிய அரசாங்கத்திடம் இருந்து சுமார் 1.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒப்பந்தங்களை வாக்னர் கூலிப்படை பெற்றுள்ளதாக விளாடிமிர் புதினே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும், செயின்ட் பீட்டர்ஸ்ப்அர்க் நகரில் அமைந்துள்ள வாக்னர் கூலிப்படை தலைமையகத்தில் நடத்த்ப்பட்ட சோதனையில் 38 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அமெரிக்க டாலர் உட்பட பல்வேறு நாடுகளின் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தங்கக் குவியல், போலி பாஸ்போர்ட்டுகள் என பல்வேறு ஆவணங்களையும் மீட்டுள்ளனர். தற்போது புதினுக்கு பயந்து நாள் ஒன்றிற்கு 50 பவுண்டுகள் கட்டணத்தில் 3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜன்னல்கள் இல்லாத அறையில் பிரிகோஜின் தங்கியிருக்கிறார்.

மேலும் அவர் மீது தேசத்திற்கு துரோகம் விளைவித்ததாக கூறி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வாக்னர் கூலிப்படைக்கு தொடர்புடைய அல்லது நிதியுதவி அளித்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!