இறந்த மகன் ஆவியை வீட்டிற்கு அழைத்து செல்ல வினோத பூஜை!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் கிராமம், சென்றயான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி வசந்தி. மகன்கள் எழில்அரசன் (24) மற்றும் உதயவசந்த் (20).

எழில் அரசன் சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். உதயவசந்த் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் உதயவசந்த் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தனது பைக்கில் சென்றார். அப்போது எதிர் திசையில் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த உதயவசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை முடிந்து கொண்டுவரப்பட்ட அவரது உடலை உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இறந்து போன உதயவசந்த் ஆவியை ஏரிக்கரையில் இருந்து, அவரது வீட்டுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

உறவினர்கள் ஒன்றுக்கூடி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி நேற்று இறந்துபோன உதயவசந்த் ஆவியை வீட்டுக்கு அழைத்து வர ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்தனர்.

அங்கு பூங்கரகம் வைத்து, தரையில் மஞ்சள்-குங்குமம் மற்றும் மலர்கள் தூவி பம்பை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜை நடந்தது. ஏரிக்கரையில் இருந்து பூங்கரகத்தை உதயவசந்த் உறவினர்கள், பம்மை மேளங்கள் முழங்க ஊர்வலமாக வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

அப்போது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மஞ்சள் நீர் தெளித்தப்படியும், பூக்கள் தூவியப்படி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து உதயவசந்த் வீட்டில், அவரது உருவப்பட்டத்திற்கு மாலை அணிவித்து வீட்டிலும் பம்பை மேளம் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டது. இறந்த மகனின் ஆவி தன்னுடன் வாழ வேண்டும் என்று நம்பிக்கையில் பெற்றோர்கள் நடத்திய இந்த பூஜை அந்த கிராம மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:- இறந்துபோனவரின் ஆவி வீட்டுக்கு வர வழி இல்லாமல் சுற்றித்திரியும். வீட்டுக்கு செல்வதோடு, தாய்-தந்தை உள்ளிட்ட உறவினர்கள் காண முடியாமல் இறந்தவரின் ஆவி துடிக்கும்.

இதனை கருத்தில் கொண்டு, இறந்தவர் ஆவி வீட்டிற்கு அழைத்து வந்தால், அவரது ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

மேலும் இறந்தவர் ஆவி வீட்டுக்கு அழைத்து வந்தால், அந்த வீடு செழிப்படையும். மேலும் அவர்களை கடவுளாக பாவித்து அவ்வப்போது அவர்களுக்கு பூஜைசெய்து வழிப்படுவோம்.

இறந்தவர்கள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது ஆவியை தனது வீட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து கடைப்பிடித்து வருகிறோம். இதனால் யாருக்கும், எந்த வித பாதிப்பு ஏற்படாது.

இதுபோன்ற அமானுஷ்ய பூஜைகள் செய்வதை, முதன்முறையாக பார்ப்பவர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு பழகிவிட்டதால் எந்தவித பயமும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!