மகனின் சடலத்தை பையில் வைத்து 200 கி.மீ., பேருந்தில் பயணித்த தந்தை..!

மேற்கு வங்காளத்தில், ஆஷிம் தேப் சர்மா என்பவர் தனது மகனின் சடலத்தை ஆன்புலன்சில் எடுத்து செல்ல பணம் இல்லாததால் பையில் வைத்து 200 கி.மீ., தூரம் பேருந்தில் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், டார்ஜிலிங் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஷிம் தேப் சர்மாவின் 5 மாத ஆண் குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குழந்தையின் சடலத்தை கலியகஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல பணம் இல்லாததால், ஆஷிம் தனது குழந்தையின் சடலத்தை பையில் வைத்து பேருந்தில் 200 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளார்.

இதுகுறித்து தந்தை ஆஷிம் கூறுகையில், ” சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு எனது ஐந்து மாத மகன் நேற்றிரவு இறந்தார்.

சிகிச்சையின்போது ரூ. 16,000 செலவழித்தேன். எனது குழந்தையை கலியாகஞ்சிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு ரூ.8000 கேட்டார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை.

அதனால், பையில் வைத்து பேருந்தில் எடுத்து சென்றேன். சக பயணிகளுக்குத் தெரிந்தால் இறக்கிவிடப்படுவோம் என்று பயந்து, யாருக்கும் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்திற்கு பயணித்தேன்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், 102 திட்டத்தின் கீழ் உள்ள வசதி நோயாளிகளுக்கு மட்டுமே இலவசம் என்றும் சடலங்களைக் கொண்டு செல்வதற்கு அல்ல என்றும் கூறிவிட்டனர்” என்று உருக்கமாக கூறினார்.

இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி,” திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ‘ஸ்வஸ்த்ய சதி’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில், ஒரு குழந்தையின் துரதிர்ஷ்டவசமான மரணத்தை வைத்து இழிந்த அரசியலில் விளையாட பாஜக முயற்சிப்பதாக டிஎம்சி மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!