மசூதியில் நடந்த இந்து திருமணம்.. வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த டிரெய்லர் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இந்த படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியானது.

இதற்கிடையே, காம்ரேட் ஃபரம் கேரளா என்ற டுவிட்டர் முகவரியில் வீடியோ ஒன்று சமீபத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ‘இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என் தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், இந்து தம்பதியருக்கு இந்து முறைப்படி திருமணம் நடப்பது பதிவாகியிருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில், மனிதகுலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!