21 அஷ்டமி நாளில் பைரவரை விரதம் இருந்து வணங்கினால்…!

காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் விரதம் இருந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல பாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை விரதம் இருந்து வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம்.

21 அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

எனவே துன்பப்படும் எல்லா மக்களும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.


தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.

பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், ஸ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின் “ஓம் கால காலாய வித்மகே கால தீத்தாய தீமகீ தந்நோ கால பைரவ பிரசோதயாத்:” என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும்.

எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!