55 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி- சட்டம் பயில துடிக்கும் பாஜக முன்னாள் எம்எல்ஏ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் நடத்திய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 263 மதிப்பெண்கள் பெற்று, முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ரா தனது 55வது வயதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர், இந்தியில் 57, குடிமைப் பிரிவில் 47, கல்வியில் 42, வரைதல் வடிவமைப்பில் 36, சமூகவியலில் 81 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உ.பி., சட்டசபையில் பரேலி மாவட்டத்தின் பித்ரி- செயின்பூர் தொகுதி எம்எல்ஏவான மிஸ்ரா, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அடுத்து சட்டத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 12ம் வகுப்பு தேர்வில் தான் பெற்ற மதிப்பெண்களில் 3 பாடங்களின் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் விடைத்தாள்களை மறு மதிப்பீடுக்கு உட்படுத்துவேன் என்றும் மிஸ்ரா கூறியுள்ளார்.

மேலும் அவர், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் 10ம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இப்போது நான் 12ம் வகுப்பு தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அடுத்ததாக எல்எல்பி (சட்டம்) படிக்க விரும்புகிறேன்.

இதனால் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க நான் உதவ முடியும். நல்ல வழக்கறிஞரின் சேவையைப் பெற முடியாமல் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினருக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை நான் எம்எல்ஏவாக இருந்தபோது உணர்ந்தேன்” என்று மிஸ்ரா கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!