தமிழரசன் திரைவிமர்சனம்!

காவல்துறையில் நேர்மையான ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் தனது ஒரே ஒரு மகனுடன் நடுத்தர குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இவருடைய மகனுக்கு ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எதிர்பாராத விதமாக திடீரென விஜய் ஆண்டனியின் மகன் ஓட்டப்பந்தயத்தின் போது மயங்கி விழுகிறார்.

பிறகு மருத்துவமனையில் சேர்த்து சிக்கிச்சை அளிக்கும் பொழுது அவனுக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. அந்த மருத்துவமனை, காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் கட்டத்தில் இருக்கிறது.

அந்த குழந்தைக்கு இதயம் தேவைபடுவதால் இதயம் மாற்று சிகிச்சை ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க, இதனால் நிர்வாகத்திற்கும் விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது.

மறுபுறம் விஜய் ஆண்டனி மகனுக்கு ஏற்பாடு செய்த இதயத்தை பணம் அதிகம் கொடுப்பதால் அமைச்சர் ஒருவருக்கு பொருத்தும் ஏற்பாடுகளும் நடக்கிறது. இதனால் கோபமடையும் விஜய் ஆண்டனி, மருத்துவமனையில் தலைசிறந்த மருத்துவர் ஒருவரை பிணயக் கைதியாக அடைத்து வைத்து மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் விஜய் ஆண்டனி மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? விஜய் ஆண்டனி எடுத்த முயற்சி கைகொடுத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. காவல் ஆய்வாளராக வரும் விஜய் ஆண்டனி தன்னுடைய மகன் மருத்துவ பிரச்சனைக்காக போராடும் இடங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மற்றபடி முந்தைய படங்களின் வெளிப்பாடுகள் இந்த படத்திலும் தென்படுகிறது. நடுத்தர குடும்ப தாயாக ரம்யா நம்பீசன் கண் கலங்க வைக்கிறார். யோகிபாபுவின் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. விஜய் ஆண்டனியின் மகனாக வரும் பிரணாவ் எதார்த்தம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மருத்துவராக வரும் சுரேஷ் கோபிக்கு படத்தில் முக்கிய கதாப்பாத்திரம், அவருடைய பணியை சரியாக செய்து முடித்துள்ளார். ராதாரவி, சோனுசூட், சங்கீதா, சாயா சிங் ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

மருத்துவமனையில் மக்களிடம் பணம் பறிக்க நிர்வாகம் செய்யும் விஷயங்களை வெளிகொண்டுவர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன். திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை, படத்தின் பல சம்பவங்கள் இதற்குமுன்பு தமிழ் சினிமாவில் தென்பட்ட ரமணா, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்கள் நினைவுக்கு வந்து செல்கிறது.

ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவு ஓகே. இளையராஜாவின் பாடல்களா? என்று கேள்வி எழுப்பும் வகையில் பாடல்கள் உள்ளது.

மொத்தத்தில் தமிழரசன் – பழைய அரசன்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!