சென்னையில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது.

இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. நேற்று மட்டும் தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

திருப்பத்தூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 103 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், கோவை, தர்மபுரி, திருத்தணி ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது.

இந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் நேற்று வெயில் சதம் அடித்தது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 101 டிகிரி வெயில் பதிவானது. பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில் தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!