இரவில் இளம்பெண்ணுக்கு பஸ் ஸ்டான்டில் தாலி கட்டிய வாலிபர்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். நாள் பார்த்து நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து பெரியோர் ஆசியுடன் திருமணங்கள் நடத்தப்படுகிறது. நல்ல நேரம் முடிவதற்குள் தாலியை கட்டுங்கள் என பல திருமணங்களில் பெரியவர்கள் சொல்வதை காண முடிகிறது.

வாழ்க்கையை தீர்மானிக்கும் திருமணம் அவ்வளவு முக்கியமானது. ஆனால் பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக ஒரு திருமணம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 8. 20 மணியளவில் பஸ்சுக்காக பயணிகள் ஆங்காங்கே காத்திருந்தனர்.

அங்கு கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் இரவு நேரம் ஆகிவிட்டதால் கடையை மூடும்பணியில் மும்முரமாக இருந்தனர். அப்போது சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம்பெண் மற்றும் ஒரு வாலிபர் என இருவர் செய்வதறியாது அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர்.

சிறிது நேரம் தனிமையில் பேசிய அவர்கள் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் இருந்த ஒரு பஸ்சின் பின்னால் யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து அங்கு சென்றனர். அப்போது வாலிபர் திடீரென்று ஒரு தாலி கயிற்றை எடுத்து அக்கம்பக்கத்தை பார்த்தபடி இளம்பெண்ணின் கழுத்தில் கட்டினார்.

அந்த இளம்பெண்ணும் தாலியை சர்வ சாதாரணமாக சரிசெய்து விட்டு அந்த வாலிபருடன் நடந்து சென்றார். இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனைக் கண்ட பயணிகள் சிலர் காலம் கலிகாலம் ஆகிவிட்டது என்று புலம்பியபடி சென்றனர். மேலும் இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை கண்ட ஆம்பூர் டவுன் போலீசார் அங்கு வந்து தாலி கட்டிய வாலிபர் மற்றும் அந்த இளம்பெண்ணை தேடினர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் போலீசார் திரும்பி சென்றனர்.

பஸ் நிலையத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் யார் எனபது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!