ஸ்டெச்சரில் படுத்திருந்த மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகன்..!

ஆந்திர மாநிலம், சென்னூர் மண்டலம், லம்பாடி பள்ளியை சேர்ந்தவர் சைலஜா. இவருக்கும் பூபால பள்ளி அடுத்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

திருமண ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலையிலேயே உறவினர்கள் நண்பர்கள் சமையல்காரர்கள் திருமண மண்டபம் அலங்கரிப்பவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு வந்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில் மணமகள் சைலஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகளின் பெற்றோர் சைலஜாவை மாஞ்சார்யாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சைலஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். சைலஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து மணமகனின் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டது.

மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அவசர அவசரமாக சைலஜாவிற்கு அறுவை சிகிச்சை நடந்தது. திருமணம் நிச்சயக்கப்பட்ட நேரத்தில் திருமணத்தை நடத்த வேண்டுமென இரு வீட்டாரின் பெற்றோரும் முடிவு செய்தனர்.

மணமக்களுக்கு குறித்த நேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என அங்குள்ள டாக்டர்களிடம் தெரிவித்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியிலேயே திருமணம் நடத்த சம்மதித்தனர்.

இதையடுத்து எளிமையான முறையில் கட்டிலில் படுத்திருந்த மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்களின் பெற்றோர்கள் திருமணம் நடந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குறித்த நேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!