உதவ ஆளின்றி கண் முன்னே தாயை பறிகொடுத்த மகன் – துருக்கி நிலநடுக்க சோகம்!

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பு ஒரு வாரம் கடந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரம் கடந்து உள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து வருகின்றன.

துருக்கியின் அன்டாகியா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜாபர் மகமுது பான்கக் (வயது 60). நிலநடுக்கத்தில் அடியோடு சரிந்த கட்டிடங்களில் இவர் வசித்து வந்த குடியிருப்பும் ஒன்று.

அந்த பழமை வாய்ந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தனது 75 வயது தாயை அவர் தேடி கண்டுபிடித்து விட்டார். அவரை காப்பாற்ற போராடி உள்ளார். பல மணிநேரம் உதவி கேட்டு அவர் கூக்குரலிட்டு உள்ளார். ஆனால், இதேபோன்று கட்டிட இடிபாடுகளில் பலரும் சிக்கிய சூழலில், சாலைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், உதவுவதற்கு ஆள் யாரும் இல்லை.

வயது முதிர்ந்த நிலையில், இருவராலும் எதுவும் செய்ய முடியாதபோதும், தாயுடன் ஜாபர் பேச முடிந்து உள்ளது. தாயின் கையை பற்றி கொண்டார். அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார்.

துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு பின்னர், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விரைவாக நடைபெறவில்லை என அதிபர் எர்டோகன் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அரசியல் மற்றும் மத ரீதியிலான காரணங்களும் கூறப்படுகிறது.

துருக்கியில் சில பகுதிகளில் குழுக்கள் இடையே நடந்த மோதலால், ஆஸ்திரிய ராணுவம் மீட்பு பணியை நிறுத்தி வைத்த தகவலும் வெளிவந்தது. இந்நிலையில், ஒரு வாரம் போன நிலையில், உயிரிழந்த ஜாபர் மகமுதுவின் தாயின் உடல் கடந்த ஞாயிற்று கிழமை மீட்கப்பட்டு உள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த ஜாபர், இது உங்களுடைய சொந்த தாயாராக இருந்தால் என்ன நடந்திருக்கும் அருமை எர்டோகன் அவர்களே? இதுவே உலக தலைவராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நீங்கள் எங்கே போனீர்கள்? என ஆவேசமுடன் கேட்டுள்ளார்.

ஜாபர் தனது தாயாருக்கு குடிக்க நீர் கொடுத்து, முகத்தில் காணப்பட்ட கட்டிட தூசுகளை துடைத்து விட்டு உள்ளார். உங்களை காப்பாற்றுவேன் என கூறியுள்ளார். ஆனால், அது தோல்வியடைந்து உள்ளது.

இதனை வருத்தமுடன் கூறிய ஜாபர், கடைசியாக அவரிடம் பேசும்போது, தண்ணீர் குடிக்க உதவட்டுமா? என கேட்டேன். அதற்கு அவர் வேண்டாம் என கூறி விட்டார்.

அதனால், இடிபாடுகளுக்கு இடையே கண்ணெதிரே இருந்த அவரது உதடுகளில் நீரை எடுத்து தேய்த்து விட்டேன். 10 நிமிடங்களுக்கு பின்னர் அவர் உயிரிழந்து விட்டார் என வேதனையுடன் தெரிவித்து உள்ளார். அலட்சியம், போதிய தகவல் பரிமாற்றம் இல்லாதது, கவனிப்பின்மை ஆகியவற்றால், எனது கண் முன்னே தாய் உயிரிழந்து விட்டார் என ஜாபர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

துருக்கியில் இதுபோன்று குறுகிய காலத்தில் மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ளாமல் எண்ணற்றோர் உயிரிழந்த அவல நிலை காணப்படுகிறது. நேற்றுடன் ஒரு வாரம் கடந்த நிலையில், அடுக்கடுக்காக சரிந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதேபோன்று அதியமான் மாகாணத்தில் தென்கிழக்கு நகரில் எலிப் புஸ்ரா ஆஜ்டர்க் என்பவர் இடிபாடுகளில் சிக்கிய மாமா மற்றும் அத்தை ஆகியோரை மீட்க கட்டிட இடிபாடுகளுக்கு வெளியே நின்று உள்ளார். அவரது அத்தையின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர்.

3 நாட்களாக உதவிக்காக காத்திருந்தும், யாரும் வராத சூழலே காணப்பட்டது என எலிப் கூறியுள்ளார். குறைந்த மீட்பு படையினரே உள்ளனர். அதுவும், யாரேனும் உயிருடன் இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரிந்தபோது மட்டுமே அந்த பகுதிக்கு அவர்கள் வர முடிகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!