ஒரேயொரு மாணவன்… 12 கி.மீ. சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்!

மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. மொத்தம் 150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது.

1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை கொண்டிருந்தபோதும், அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார். கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்.

அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும்.

இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறும்போது, 2 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் கற்று தருகிறேன்.

அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தபோதும், மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இந்த பள்ளியை நடத்தி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!