கிரிக்கெட் வீராங்கனை மரணத்தில் திருப்பம்… கடிதத்தில் திடுக் தகவல்!

ஒடிசாவில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வெயின் கடந்த 13-ந்தேதி கட்டாக் நகரில் வன பகுதியில் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவர், புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பதற்கான பயிற்சிக்காக 25 வீராங்கனைகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில், இறுதி பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

இதனால், வருத்தத்துடன் மற்றவர்களிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 11-ந்தேதி டாங்கி என்ற பகுதியில் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளனர். அப்போது ராஜஸ்ரீ தனது பயிற்சியாளரிடம், தந்தையை பார்க்க செல்கிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், அதன்பின் அவர் திரும்பவில்லை. இதனை தொடர்ந்து, அவரது பயிற்சியாளர் கடந்த 11-ந்தேதி மங்களாபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பல இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கட்டாக் நகர் அருகே அதகார் பகுதியில் அடர்ந்த வன பகுதியில் மரம் ஒன்றில் தூக்கு போட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது என துணை காவல் ஆணையாளர் பினாக் மிஷ்ரா கூறினார்.

ராஜஸ்ரீயின் ஸ்கூட்டர், வன பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அவரது மொபைல் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து, குருதிஜாதியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என மிஷ்ரா கூறினார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறினர். மீட்கப்பட்ட அவரது உடலில் முகம் உள்பட பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன.

தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றை சமீபத்தில் கைப்பற்றினர். வன பகுதியில் தனியாக நின்ற ராஜஸ்ரீயின் ஸ்கூட்டரில் இருந்து அது கண்டெடுக்கப்பட்டது. அதில், தனது பயிற்சியாளர் மற்றும் ஒடிசா கிரிக்கெட் கூட்டமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் தனது மரணத்திற்கு காரணம் என எழுதப்பட்டு உள்ளது.

இந்த குறிப்பு கிடைத்தபின், ராஜஸ்ரீயின் குடும்பத்தினர், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி புகார் அளித்தனர். குறிப்பு பற்றி கையெழுத்து நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனினும், அது தனது மகளின் கையெழுத்துடன் ஒத்து போகவில்லை என ராஜஸ்ரீயின் தாயார் கூறியுள்ளார்.

ஆல்-ரவுண்டர் மற்றும் சிறந்த வீராங்கனையாக இருந்த தங்களது மகளை உள்நோக்கத்துடன் வெளியேற்றி உள்ளனர் என ராஜஸ்ரீயின் குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறினர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் அமைப்பு மறுத்து உள்ளது. அணி தேர்வு நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறவில்லை என அமைப்பு தலைவர் சுப்ரத் பெஹேரா கூறினார்.

இந்நிலையில், ராஜஸ்ரீயின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்து உள்ளது. அதில், ராஜஸ்ரீ மூச்சு திணறி உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது தலையில் காயத்திற்கான அடையாளங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளது. எனினும், அவரது மரணத்திற்கான சரியான காரணம் பற்றிய இறுதி அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!