துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க வந்த நபர்களை ஓட ஓட விரட்டிய பெண் காவலர்கள்..!

பீகார் வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை இரு பெண் காவலர்கள் ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

பீகார் மாநிலம் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கிஅமைந்துள்ளது . எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக, சாந்தி குமாரி, ஜூஹி குமாரி எனும் இரு பெண் காவலர்கள் இருந்துள்ளனர்.

அப்போது வங்கி முன் இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கியுள்ளனர். வெளியே 2 பேர் நிற்க, 2 பேர் மட்டும் முகமூடி அணிந்துகொண்டு வங்கிக்குள் நுழைந்தனர். இதனால் சந்தேகமடைந்த 2 பெண் காவலர்களும் முகமூடியை கழற்றி வங்கி பாஸ்புக்கை காட்டுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அந்த இருவரும் சட்டென கை துப்பாக்கிகளை காவலர்கள் மீது நீட்டியுள்ளனர். அதற்கெல்லாம் அஞ்சாமல், காவலர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் பறந்து அவர்களைத் தாக்கினர்.

தங்கள் துப்பாக்கிகளைக் கொண்டு அடித்து அவர்களை ஓட ஓட விரட்டினர். விட்டால் போதுமென ஓடிய வங்கி கொள்ளையர்கள், இருசக்கர வாகனத்தைக் கூட எடுக்காமல் அங்கிருந்து தப்பியோடினர்.

பெண் காவலர்களின் தைரியமான இந்த செயல் வங்கியின் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட எஸ்பி மணீஷ் வங்கியில் ஆய்வுசெய்தார். பெண் காவலர்கள் சாந்தி குமாரி, ஜூஹி குமாரியின் வீரதீர செயலுக்காக பரிசு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார். இதற்கு நடுவே, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!