மனக்கவலை, திருமண தடையை  நீக்கும் காணும் பொங்கல்!

பொழுது புலர்ந்தது முதல் இருள் சூழும் வரை தங்கள் ஜீவனத்திற்காக உழைத்து வாழ வேண்டும் என்பது உலக நியதி. ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே பண்டிகைகள் கொண்டாடுவதை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர்.

போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது. அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட ஊர் மக்களை எளிதில் எந்த கொடிய நோய் , இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாது. கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.

காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும்.

இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம். காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!