நடிகர் கமல்ஹாசன் தொடங்கவிருக்கும் கட்சியின் கொள்கை என்ன தெரியுமா?


3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் பேச்சு. அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார்.

பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தார். அப்போது தமிழர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசியதாவது:-

“நான் என் வேலைகளை விட்டு விட்டு கடமை செய்ய வந்து இருக்கிறேன். அதேபோல் நீங்களும் கொஞ்ச நேரம் நாட்டுக்காக ஒதுக்க வேண்டும். நான் வெறும் கலைஞனாக சாக மாட்டேன். உங்கள் பணியில் அது நிகழும்.

அதுதான் சரியான வழியாக இருக்கும். கலைஞனாக இருப்பது குறைவு அல்ல. ஆனால் எனக்கு அது போதவில்லை. அரசியல் கட்சி பெயர், கொடி போன்றவை வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும்.

உங்கள் பங்கும் அதில் இருக்க வேண்டும். கட்சியில் சேரும்படி சொல்லவில்லை. அது உங்கள் இஷ்டம். ஆனால் இந்த அரசியல் யாரோ செய்கிறார்கள் அதில் நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கி இருக்காதீர்கள்.


ஓட்டு இருப்பவர்கள் ஓட்டு போட்டே ஆக வேண்டும். ஓட்டு விற்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. சில கனவுகள் தூங்க விடாமல் வந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு கனவுதான் நாளை நமதாக வேண்டும் என்று தமிழகத்துக்காக நான் காணும் கனவு. நீங்கள் காட்டும் அன்புக்கு நான் கொஞ்சமாவது திருப்பிக்கொடுக்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இன்னும் 60 வருடங்களெல்லாம் இல்லை. என்னால் இயன்றவரை உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு செல்வது எனது கடமை.

அரசியல் நீண்ட பயணம். அது எனக்கான பயணம் இல்லை. தமிழர்களுக்கான பயணம். அதில் நானும் கூட நடந்தேன் என்ற பெருமை எனக்கு போதும்.

கொள்கை திட்டம் என்ன என்று என்னிடம் கேட்கப்படுகிறது. அதுபற்றி வருகிற 21-ந்தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நிறைய விஷயங்களை மாற்ற வேண்டி உள்ளது.


தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தரமான கல்வியால் இந்தியா உயரும். தனியார் கையில் இருக்கும் மருத்துவத்தை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

நீர் வழித்தடங்களை மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற அடிப்படை வசதிகளை 5 வருடத்தில் செய்து கொடுக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அது முடியும் என்று நம்புகிறேன்.

உடனே கட்சி தொடங்குங்கள் என்கிறார்கள். அவசரமாக அதை செய்ய முடியாது. 3 தலைமுறைகளுக்கு பயன்படும் சமுதாய கருவியாக இந்த கட்சி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைவது தமிழுக்கும் ஹார்வர்டுக்கும் பெருமை. நாம் தொல்காப்பியம் எழுதும்போது பிரிட்டனில் மூங்கிலை வைத்து சவரம் செய்தனர். தமிழ் பெருமையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!