திடீரென மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண் – 5 பேருக்கு மறுவாழ்வு!

மூளைச்சாவு அடைந்த வெளிநாட்டு பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.

சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் தெரசா பெர்னாண்டஸ் (வயது67).

ஆஸ்பத்திரி ஊழியரான இவர், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்கு பின் உலகை சுற்றி பார்க்க விரும்பிய அவர் ஐஸ்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

கடந்த 5-ந் தேதி இந்தியாவை சுற்றி பார்க்க மும்பை வந்தார். எலிபெண்டா குகைகளை சுற்றி பார்த்த அவர், 7-ந் தேதி தென்மும்பை பகுதியில் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் அருகில் இருந்த ஜாஸ்லோக் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. ரத்தக்கசிவால் தெரசா பெர்னாண்டசின் மூளையின் முக்கிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. மூளையின் அழுத்தத்தை குறைக்க டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்த பெண் மூளை சாவு அடைந்தார். உடல் உறுப்புகள் தானம் இதுகுறித்து அவரின் மகள் பெரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தாயின் உடல் உறுப்புகளை தானம் வழங்க முன்வந்தார்.

இதையடுத்து தெரசா பெர்னாண்டசின் இதயம், நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகங்களை டாக்டர்கள் அகற்றினர். இதயம் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டது.

மற்ற உடல் உறுப்புகள் மும்பையை சேர்ந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன. இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!