வீரப்பனை கொன்றது எப்படி..? – முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் பகீர் தகவல்!

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாடு-கர்நாடக, கேரளா என 3 மாநில போலீசாருக்கும் பெரும் சவாலாகவும், சிம்ம சொப்பனமாகவும் இருந்தவர் வீரப்பன்.

காட்டு ராஜாவின் ஆட்டத்திற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

தற்போது டெல்லி கமிஷனராக உள்ள கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் ஆரோரா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் தங்களுக்கான பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டினர்.

2004-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி என்ற இடத்தில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடிப்படை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது.

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை ‘வீரப்பன்-சேசிங் தி பிரிகாண்ட்’ என்ற ஆங்கில புத்தக வடிவில் முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் தற்போது ஒலி வடிவமாக்கப்பட்டு ஆடிபிள் ஆடியோ புக்ஸ் அண்டு போட்காஸ்டஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை தரமணியில் உள்ள இதழியல் கல்லூரி ஒன்றில் விஜயகுமார் வெளியிட்டார்.

தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவராசியமாக பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-

சந்தன மர கடத்தல், தந்தங்களுக்காக யானையை வேட்டையாடுதல் என வீரப்பன் வாழ்க்கை சட்டம்-ஒழுங்குக்கு எதிராகவே இருந்தது. தன்னை பிடிக்க வந்த போலீசார், வன அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவன் கொன்று குவித்தான்.

வீரப்பனை பிடிப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. பூலான்தேவி போல அவருக்கு அரசியல்வாதி ஆக ஆசை இருந்தது. அவருக்கு திருச்சி, பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்த அமைப்புகள் உதவி செய்தது.

மலைவாழ் மக்களுக்கு வீரப்பன் பாதுகாப்பாக இருந்தார் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு வீரப்பன் உதவி செய்தார். இதனால் அவரை அந்த மக்கள் கொண்டாடினர்.

அதேநேரத்தில் எங்களை பொறுத்தவரையில் வீரப்பன் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றவாளி. ஆதாரங்களின் அடிப்படையில் வீரப்பன் சரணடைய நிறைய வாய்ப்புகளை அளித்தோம். வீரப்பன் இதற்கு ஒத்துழைக்கவில்லை.

அந்தவகையில் வீரப்பனை உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கும் இன்றும் இருக்கிறது. இந்த ஆடியோ கேட்கும்போது, வீரப்பன் பற்றிய எங்களது தனிப்படையினரின் பார்வை குறித்து தெளிவான புரிதல் உருவாகும்.

1989-ம் ஆண்டு வீரப்பனால் நிகழ்த்தப்பட்ட அந்த சம்பவம் தான் வீரப்பனை பிடிப்பதற்கான தீவிரம் அதிகப்படுத்தப்பட்டது. இதுபோன்று பல விஷயங்கள் அந்த ஆடியோவில் பேசி உள்ளோம்.

அதிலும் குறிப்பாக இப்போது போன்று எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலக்கட்டத்தில் வீரப்பனை பிடிக்க பல யுத்திகளை கையாண்டோம். வீரப்பனின் மரணத்தின் கடைசிக்கட்ட நிமிடங்கள் மறக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!