லம்போர்கினியில் சென்று நோயாளிகளுக்கு சிறுநீரகம் வழங்கிய போலீசார்!

இத்தாலியில் நோயாளிகளுக்கு சிறுநீரகங்களை வழங்குவதற்காக லம்போர்கினி சூப்பர் காரை போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரை இத்தாலிய போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

சிறுநீரகங்கள் இத்தாலியின் வடகிழக்கில் உள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில், ‘மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம்: வாழ்க்கை’ என்ற தலைப்பில் போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், “மாநில காவல்துறையின் சிறப்பு சாண்டா கிளாசுக்கு நன்றி.

இரண்டு பேருக்கு சிறுநீரகம் பரிசாக வழங்கப்பட்டது. அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான கிறிஸ்துமசை கொண்டாட முடியும் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய லம்போர்கினி ஹரகன் வகை கார் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 வினாடிகளில் அடையும் திறன் கொண்டது.

இந்த கார் கடந்த 2017-ம் ஆண்டு கார் தயாரிப்பாளர்களால் காவல்துறைக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், இந்த கார் வடக்கு இத்தாலியில் உள்ள போலோக்னாவில் சாதாரண போலீஸ் நடவடிக்கைகளிலும் இரத்தம் மற்றும் உறுப்புகளை அவசரமாக கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!