சிறுமி வாங்கிய பருப்பு வடைக்குள் சுண்டெலி…!

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட உளுந்த வடையில், பல்லி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று சின்னாளப்பட்டியில் உள்ள டீக்கடையில் வாங்கிய பருப்பு வடைக்குள் சுண்டெலி கிடந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உளுந்த வடை, பருப்பு வடை, போண்டா உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனை சூடு பிடிப்பது வழக்கம்.

சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கடையில் பலகாரங்களை வாங்கி செல்வர். அதன்படி நேற்று அந்த கடையில், பூஞ்சோலை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பார்சலில் வடைகளை வாங்கினாள். வீட்டுக்கு சென்றதும் சிறுமி பார்சலை ஆர்வமுடன் பிரித்தாள்.

அதில் இருந்த பருப்பு வடையை பிய்த்து சாப்பிட முயன்றாள். அப்போது, வடைக்குள் சுண்டெலி ஒன்று கருகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். இதனை தனது பெற்றோரிடம் சிறுமி காண்பித்தாள்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுண்டெலியுடன் கூடிய வடையை டீக்கடைக்கு எடுத்து சென்றனர். பின்னர் இதுதொடர்பாக டீக்கடைக்காரரிடம் கேட்டனர்.

அப்போது இனிவருங்காலத்தில் இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்வதாகவும், இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொண்டதாக தெரிகிறது. பருப்பு வடைக்காக அரைத்து வைக்கப்பட்டிருந்த மாவுக்குள் சுண்டெலி தவறி விழுந்திருக்கலாம். அதனை கவனிக்காமல், அப்படியே மாவுடன் பிசைந்து எண்ணெயில் போட்டு எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே பருப்பு வடைக்குள் சுண்டெலி கிடந்த புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி ஜாபர் சாதிக், சின்னாளப்பட்டி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திறந்தவெளியில் பலகாரங்கள் தயாரிப்பதையும், பலமுறை பயன்படுத்திய எண்ணெயை வைத்து பலகாரங்கள் தயார் செய்வதையும் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அந்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனிவருங்காலத்தில், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்களை தயார் செய்தால் டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!