நிம்மதியா தூங்க முடியல… ஐ.டி. ஊழியர் போலீசில் புகார்!

பொதுவாக நகை மற்றும் பணம் திருட்டு போனாலோ அல்லது நிலப்பிரச்சினை, சொத்து தகராறு, மோசடி, வழிப்பறி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போலீசில் புகார் கொடுப்பது வழக்கம்.

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக வீடுகளில் நாய்கள், பூனைகள், கிளிகள் வளர்ப்பது என்பது அதிகரித்து வருகிறது. வளர்ப்பு பிராணிகளால் இரு குடும்பங்கள் இடையே தகராறும் ஏற்பட்டு வருகிறது.

வளர்ப்பு நாய்கள் பக்கத்துவீடுகளில் அசுத்தம் செய்ததாக சண்டை ஏற்படும் சம்பவங்களும், அந்த நாய்களை விஷம் வைத்து கொன்ற சம்பவங்களும் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் கூட பெங்களூரு ருக்மய்யா லே-அவுட் பகுதியில் வீட்டில் வளர்த்த கிளி ஒரு பெண்ணை பார்த்து விசில் அடித்ததால் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணின் கணவரான வங்கி ஊழியர், கிளி வளர்த்தவரை தாக்கிய பரபரப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

இதுபோன்ற நூதன சம்பவங்கள் தொடர்பாகவும் சமீபநாட்களாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பக்கத்துவீட்டில் வளர்த்து வரும் கோழி அதிகாலை வேளையில் கொக்…. கொக்… கொக்கரோ என கூவுவதாலும், வாத்துக்கள் பக்… பக்…. என சத்தம் போடுவதாலும் தனது குழந்தையின் தூக்கமும், தனது குடும்பத்தினரின் தூக்கமும் கலைந்துவிடுவதாகவும் போலீசில் புகார் அளித்த சம்பவம் பெங்களூருவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதுபற்றிய விவரம் பின்வருமாறு:- பெங்களூரு ஜே.பி.நகர் 8-வது பேஸ் பகுதியில் ஐ.டி. ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த அவர் தனது மனைவி மற்றும் 2½ வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே ரவி என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் சேவல், கோழிகள், வாத்துக்களை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கோழி, வாத்துக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து கூவி கொண்டே உள்ளன. குறிப்பாக அதிகாலை நேரங்களில் இடைவிடாது கூவுவதால் ஐ.டி.ஊழியரின் குழந்தை தூங்க முடியாமல் தினமும் அழுதுகொண்டே இருந்துள்ளது. இதுகுறித்து ரவியிடம் பலமுறை தம்பதி புகார் அளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் கோழி, வாத்துக்களின் சத்தத்தால் தங்கள் குழந்தை உறக்கம் இன்றி தவிப்பதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என கூறி பெங்களூரு மாநகர போலீசாருக்கு டுவிட்டர் மூலம் தம்பதி புகார் அளித்துள்ளனர். மேலும், அவற்றை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

வீட்டில் இருந்தபடி கோழி, வாத்துகள் கூவுவதை வீடியோவாக பதிவு செய்து டுவிட்டர் புகாருடன் இணைத்து இருந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த புகாரை பெங்களூரு மாநகர போலீசார், தலகட்டபுரா போலீசாருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தலகட்டாபுரா போலீசார் ரவியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தான் சொந்த வீட்டில் வசிப்பதாகவும், அதனால் கோழி, வாத்துக்களை வளர்த்து வருவதாகவும் ரவி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அருகில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கோழிகள், வாத்துகளை வளர்க்குமாறு அறிவுறுத்திவிட்டு சென்றனர்.

இதுகுறித்து ரவி கூறுகையில், “பொதுவாக போலீசில் நேரில் சென்று புகார் அளித்தால் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி எனது வீட்டு அருகில் வசித்து வருகிறார்கள். அவர்கள் டுவிட்டரில் கொடுத்த புகாரில் போலீசார் உடனே வந்து என்னிடம் விசாரித்தனர். நான் எனது வீட்டில் கோழி, வாத்துக்களை வளர்த்து வருகிறேன். போலீசார் கூறிய அறிவுரையை கடைப்பிடிப்பேன்” என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!